Thursday, September 16, 2010

இணுவில் கந்தசுவாமி கோவில்

இலங்கையின் வடபுலம் பண்டைத் தமிழரின் பண்பாட்டுக்கு ஓர் உறைவிடம். இங்குள்ளவர்கள் பழைமையைப் பேணுவதில் மிகுந்த ஈடுபாடுடையவர்கள். இங்கு பழம்தமிழரின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளன.யாழ்ப்பாணப் பழம்பதிகளுள் ஒன்றான இணுவில், சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு முதன்மை அளித்து வருவது யாவரும் அறிந்த உண்மையாகும். 'இணையிலி' என்று பழங்காலத்தில் அறியப்பட்ட பெயர் காலப்போக்கில் மருவி இணுவில் என வழங்கப்படுகிறது.

சைவ பாரம்பரியங்களில் இறுக்கமான பற்றுடைய இவ்வூரின் பட்டித் தொட்டியெல்லாம் இறைவழிப்பாடுகள் நடாத்தப்பட்டன. இறைவனின் திருவுருவை கோவிலென்று கும்பிடும் பழக்கம் இங்கு நீண்ட காலமாக உண்டு.இணுவிலின் கிழக்கெல்லையிலுள்ள 'காரைக்கால் சிவன் கோவில்'வரை ஒரு வரிசையில் வைத்துப் பார்க்கும் பொழுது, எட்டுக் கோவில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டன.இவற்றுள் 'இணுவில் பெரிய கோவில்' என்பது இணுவில் கந்தசுவாமி கோவிலைக் குறிக்கும். இங்கு கோவில் கொண்டுள்ள முருகனை 'நொச்சியம் பதியான், காஞ்சியம் பதியான், கல்யாண வேலவர்' எனப் பல பெயர்களாற் சுட்டி அழைத்து வழிபடுபவர். இப்பெயர்கள் ஒவ்வொன்றுக்குமான பெயர்க்காரணமும் உண்டு.இக்கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டதுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது.

சங்குவேலி வயற்பரப்பில் இருந்து வருடா வருடம் இக்கோவிலுக்குத் தானமாக வழங்கப்படும் நெல்லில் இருந்து அரசகேசரி காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்ச்சங்கத்துடன் இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது தெளிவாகிறது.இவ்வூரின் வரலாறாக யாழ்ப்பாண வைபவமாலையில் செங்கரும்பும், செந்நெல்லும், கமுகும் தழைத்தோங்கும் இணுவிலில் மேழிக்கொடியுடையவனும் திரண்ட தோள்களையும் விரிந்த மார்பினையும் உடையவனும், குவளை மலர் மாலையை அணிந்த திருக்கோவிலூர் பேராயிரமுடையோன் முதலி ஆட்சித்தலைவனாக விளங்கினான் எனக்கூறப்படுகிறது.இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1365 என முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறியுள்ளார். அவன் மரபில் வந்த கனகராச முதலி காலத்து ஆலயமாக இவ்வாலயம் கருதப்படுவதுடன் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டு கால வரலாற்றை இக்கோவில் கொண்டுள்ளது.மயிலங்காடு தொடக்கம் ஆனைக்கோட்டை வரை எல்லைகளாக விரிந்திருந்த 'இணையிலி' என்று அழைக்கப்பட்ட இணுவில் கிராமத்தில் முதலிக்குளம், காக்கைக்குளம் எனும் இரு குளங்கள் மூலம் வடக்கில் பருத்தி, கரும்பு, கமுகு ஆகியனவும் தெற்கில் செந்நெல்லும் தழைத்தோங்கியது.

திருவருள் சித்தத்திற்கு அமைய தன் இல்லத்தில் கந்தனுக்கு குடிலொன்றை அமைத்து முதலியார் வழிபட்டார் என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். அவருக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்துக்கு முன்னால் உள்ள 'முதலியாரடி' எனப்படும் சிறு ஆலயமாகும்.போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு பின் அதே இடத்தில் 1661ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதே தற்போதைய இணுவில் கந்தசுவாமி ஆலயமாகும்.பழங்குடிமகனான வேலாயுதரும், மனைவியும் முருகனிடத்தில் ஆராத அன்புடையவர்கள். அவர் ஒரு நாள் நித்திரையாக இருந்த பொழுது முருகப்பெருமான் கனவில் தோன்றி தான் காஞ்சியம்பதியில் இருந்து வருவதாகச் சொல்லி தனக்கு இல்லிடமொன்று அமைத்துத் தருமாறு கேட்டார். அதற்கு எங்கே அமைத்துத் தருவதென்று வேலாயுதர் வினவியதும் உமது வெற்றிலைத் தோட்டத்தில் 'நொச்சித்தடி' நாட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அமைக்கலாம் என்று கனவில் முருகப்பெருமான் கூறினார்.மறுநாள் பொழுது புலர்ந்நது. என்ன அதிசயம்! வேலாயுதரின் வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி ஒன்று புதிதாய் நாட்டப்பட்டிருந்தது. கனவில் காட்சி தந்து இல்லிடம் கேட்டது முருகப்பெருமான் என்றே நம்பினார்.

முருகப்பெருமானின் திருக்குறிப்பை நிறைவேற்ற மனம் கொண்ட வேலாயுதர் தமது தோட்டத்தில் இருந்த மாட்டுக்குடிலை நொச்சித்தடி நடப்பட்டிருந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தார்.இணுவில் கந்தசுவாமி கோவில் ஆரம்பத்தில் மாட்டுக் குடிலாய் இருந்து, செங்கற் கோவிலாய் மாறி, பின் வெள்ளைக் கற்கோவிலாக தோற்றம் பெற்றது. மொட்டைக் கோபுரம் மற்றும் மூன்று தளங்களை கொண்ட இராசகோபுரம் என இரு கோபுரங்களுக்கிடையே பெரியதொரு மண்டபமும் கொண்ட கோவிலை யாழ்பாணக் கிராமப் புறங்களில் காண்பது அரிது.இவ்வாறான அமைப்பினையுடைய இந்த ஆலயத்தின் மீது இணுவைத் தவஞானியாகிய பெரிய சந்தியாசியாரின் கண்ணோட்டம் சென்றது. சுப்பிரமணியம் என்ற பிள்ளைப் பெயர் கொண்ட இத்தவஞானி இவ்வாலயத்திற்கு அழகியதொரு திருமஞ்சம் செய்து வைக்க விரும்பினார்.முப்பத்தைந்து அடி உயரமான இந்த திரு மஞ்சத்திற்கு நான்கு சில்லும், மேலே ஐந்து கலசங்களும் பொருத்தப் பெற்றுள்ளன. இந்த அருமையான மஞ்சத்தில் வள்ளி, தெய்வயானை சமேதரமாக ஆறுமுக சுவாமி கொலுவிருந்து மகோற்சவத்தில் பன்னிரண்டாம் திருவிழாவன்றும், தைப்பூசத் திருநாளன்றும் திருவீதியில் ஊர்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை எட்டிப்பிடித்துள்ள இந்த மஞ்சத்தைப் போன்று ஒரு மஞ்சம் இலங்கையிலோ, இந்தியாவிலோ, வேறு எங்குமோ காணமுடியாது என தொல்பொருள் ஆராச்சியாளர் பலர் கூறியுள்ளார்கள்.உலக பெருமஞ்சம் இது தான் என வரலாற்று அறிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். இந்த மஞ்சம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, நன்கு பேணுவதற்காக நாற்பதடி உயரமான மஞ்சக் கொட்டகையும் நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளது.பெரியவர் காலத்தில் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவன்று நொச்சியம் பதியில் இருந்து காரைக்கால் சிவன் கோவில் வரை ஐந்து தேர்கள் சென்று திருவீதிவலம் வந்து காட்சி அற்புதமானது.ஓர் ஆலயத்தின் கீர்த்திக்கு அவ்வாலயத்தில் அமைந்துள்ள புண்ணிய தீர்த்தமும் விசேட சிறப்பைத் தருகின்றது. அந்த வகையில் இவ்வாலயத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள சாந்தியடி வயிரவர் சந்நிதியும் அதன் முன்பாகவுள்ள தீர்த்த கிணறும் மிக பிரசித்தமானவை.
நன்றி: பரிபாலனச்சபைத் தலைவர் எஸ். சோதிப்பெருமான்
தொகுப்பு :உமா பிரகாஷ்
http://www.yarlmann.lk/head_view.asp?key_c=382

Saturday, August 15, 2009

இணுவிலின் தவப்புதல்வர்கள்

இணுவில் மக்களின் நலனுக்காக சிலர் மக்களோடு வாழ்ந்து தவம் இயற்றுகின்றனர்.
Monday, July 20, 2009

சூரன் போர்.....

மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் .... புல்லாகிப் பூடாகி புழுவாகி மரமாகிப்... என ஆன்மா சிவனாகின்றபோது ஆன்மாவில் உள்ள அரசுர குணங்களை கடவுள் வந்து அழித்து ஆன்மைவை தன்னிடத்தில் சேர்த்துக்கொள்வதாக கொள்ளப்படுகின்றது.

இதனை ஒரு திருவிழாவாக்கி அதனை ஊர்க் கோவில்களில் மீண்டும் மீண்டும் செய்வதால் நாங்கள் அதனை மனமார நினைத்துக் கொள்கின்றோம் அந்த வேளையில் நாங்கள் எங்களுடைய ஆன்மாவில் மாற்றங்களை காணுகின்றோம்..Friday, July 10, 2009

எங்கள் ஊர்1. எங்கள் ஊர்
எங்கள் ஊர் வரலாற்றுப் பெருமை உள்ளது. யாழ். அரசு முதலில் பன்னிரு பெரும் பகுதிகள் உள்ளதாக இருந்தது. அவற்றுள் இவ்வூர்ப்பகுதியும் ஒன்று. அப்போது இவ்வூர்ப்பகுதியின் தலைவனாகத் தமிழகத்துப் பேராயிரவன் என்பவன் இருந்தான். இவன் தமிழகத்துக் காலிங்கராயன் என்பவனை இவ்வூர்ப் பகுதியைச் சிறப்பாக ஆட்சிசெய்தான். இவனுக்குப் பின் இவன் மகன் கைலாயநாதன் அரசனாக இருந்தான். இவன் பெரும் வீரனாகவும் அருளாளனாகவும் இருந்தான். இவனுக்கு இளந்தாரி என்றும் பெயர் இருந்தது. இவர்கள் பேரசர்களாக இருந்தவர்கள் ஆதலின் இவர்களின் படைத்தவர்களாகவும் முதலிமாராகவும்; வன்னியத் தலைவர்கள் இருந்தனர். அக்காலத்தில் இவ்வூருக்கு இணையிலி என்னும் பெயர் இருந்தது. இவ்வூர் வரலாற்றை யாழ் வரலாற்று நூல்களும் பஞ்சவண்ணத் தூது நூலும் கூறுகின்றன. இவ்வூரவர்கள் தமிழ்ப்பற்றும் சமயப்பற்றும் பண்பாடுகளும் உள்ளவர்கள்.

2. சிவகாமி அம்மை திருக்கோயில்

கலிங்கராயன் சிதம்பரத்துச் சிவகாமி அம்மையிடம் மிகப் பற்றுள்ளவன். ஆதலின் இவனே இவ்வழிபாட்டை இவ்வூpரல் அமைத்தான் இன்று இத் திருக்கோயில் உரிய அமைப்புகளோடு இந்நாட்டில் புகழ்பெற்று விளங்குகிறது. இவ்அம்மை இவ்வூரை மட்டுமல்ல இந்நாட்டையே காப்பவள் என அருளாளர் கூறுவர். இதற்குச் சில நிகழ்வுகளும் சான்றாக உள்ளன. ஆண்டு தோறும் விசேட நாட்களில் இங்கு விழாக்கள் சிறப்பாக நிகழும். இக்கோவிலில் அழகிய பூந்தோட்டம் ஒன்று உள்ளது. வெள்ளிக்கிழமைகளிலும் விசேட நாட்களிலும் பக்திப் பாடல்கள் பாடும் நிகழ்வு நீண்டகாலமாக நிகழ்ந்து வருகின்றது. இங்கு பிற ஊர் மக்களும் வழிபட்டுப்பயன் பெறுகின்றனர். இக்கோவிலின் மேற்பால் கலிங்கராயனும் கைலாய நாதனும் வழிபட்ட அருள்மிகு வைரவர், பத்திரகாளி ஆகியவர்களுக்கான வழிபாட்டு நிலையம் உள்ளது.


3.கைலாய நாதன் இளந்தாரி திருக்கோவில்

அருளாளனாக விளங்கிய கைலாயநாதன் பல அற்புதங்களைச் செய்தனன். ஒருநாள் எதிர்பாரா வகையில் ஒரு புளிய மரத்தில் இருந்து வான்வழிச் சென்று மறைந்தான். இதனை அறிந்த மக்கள் இவன் வாழ்ந்த இடத்தில் கூடி இருந்தனர். தன்னை வழிபட்டு வரும் படியும் அவர்களைப் பாதுகாப்பதாகவும் அவர்களுக்குத் தெரிவித்தான். அன்றுமுதல் இவர் வாழ்ந்த இடத்தில் நாள்தோறும் வழிபாடு நடைபெற்றது. இவர் மறைந்த நாளில் இவர் வாழ்ந்த இடத்தில் பெருவிழா ஆண்டு தோறும் நீண்;டகாலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் பொங்கல் செய்தும் உணவு வகைகளை ஆக்கியும் படையல் செய்தும் வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டு நாளில் இப்பகுதி மக்கள் வேறு எங்கும் செல்லார். இப்போது இவ்வழிபாடு இவர் உருக்கரந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த இடத்தில் ஒரு கோவில் அமைக்கப்பெற்று இருக்கின்றது. புளியமரத்தின் முன்பாக உள்ள கருவறையில் உருவங்கள் இல்லை. சில கற்கள் வழிபாட்டுக்கு உரியனவாக உள்ளன. பண்டைத் தமிழர் வழிபாட்டு முறைப்படி இங்கு வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வன்னிய முதலிமாருக்கும் இங்கு வழிபாடு உண்டு. ஆண்டுப் பெருவிழாவில் பஞ்சவண்ணத்தூது நூல் படிக்கப்பெறுகின்றது. இந்நூலில் இளந்தாரித் தெய்வத்தின் அருளாற்றல் கூறப்படுகின்றது. ஆண்டுப் பெருவிழாவில் சில மரபு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இங்கு நடைபெறும் வழிபாடு மிகப் பக்தியோடு நிகழ்கிறது. நாள் தோறும் மக்கள் இங்கு வழிபடுகின்றனர். அயலில் உள்ள வீதி வழியே செல்பவர்களும் இங்கு பக்தியோடு வழிபாடு செய்து செல்வர். இளந்தாரியரை வழிபடுவதனால் தங்களுக்கு எவ்வகை இடர்களும் வரா எனவும் நோய் பிணிகள் நீங்கும் எனவும் இங்கு வழங்கும் வீபூதி தீர்தம், உணவு என்பன மிக அருள் உள்ளவை எனவும் மக்கள் நம்புகின்றனர். இங்கு நடைபெறும் ஆண்டுப் பெருவிழாவில் காலிங்க கலிங்கராயன் கைலாயநாதன் ஆகியவர்கள் வழிபட்ட வைரவர், பத்திரகாளி ஆகிய கடவுளர்களுக்கும் மெய்ப்பாதுகாவலர்களாக விளங்கிய அண்ணமாருக்கும் வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வழிபாடு இந்நாட்டில் வேறு இடங்களில் இல்லாத ஒரு சிறப்பு வழிபாடு. இளந்தாரி புளிய மரத்தின் வழி வான் வழி சென்றதையும் பின்பு தம்மை வழிபட்டவர்களுக்கு அருளுரை வழங்கியதையும் அருள்மிகு கண்ணகி சேரநாட்டில் வேங்கை மரத்தின் வழி வான் சென்றதும் தனக்கு கோயில் அமைத்த சேரன் செங்குட்டுவன் முதலியோருக்கு அருளுரைகள் வழங்கியதும் நினைவூட்டுகின்றன.

4. பாடல்களை அருளியவர்

சிவகாமியம்மைப்பதிகங்களையும் இளந்தாரியார்ப் பதிகத்தையும் அருளியவர் இவ்வூரில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த சின்னத்தம்பிப் புலவர் என்னும் அருளாளர். இவர் முன்னைய அரசர் வழி வந்தவர். கதிர்காமசேரகர மானா முதலியார் என்றும் பெயருள்ளவர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் தோம்பு எழுதும் பணிசெய்தவர். சிவகாமி அம்மையை வழிபட்டு அருள் பெறறவர். இவரிடம் பொறாமை உள்ள ஒருவரது தவறான தகவலால் ஒல்லாந்த அதிகாரி இவரைச் சிறையில் வைத்தான். இவர் தனக்கு நிகழ்ந்த நிகழ்வினால் மிக வேதனையுற்று சிறையில் இருந்து தமது குல தெய்வமான சிவகாமி அம்மையை நினைத்து ஒரு பதிகம் பாடினார். இதனால் சிறைக்கதவு தானாக திறந்தது. இதனை அறிந்த அதிகாரி இவர் அருளார் என உணர்ந்து, இவரை சிறையில் இருந்து விடுவித்தான். இவர் இவை போலச்சிவகாமி அம்மை மீது பிள்ளைத் தமிழ்ப் பாடல்களையும் பாடினார். தன்னைப்பிள்ளையாகவும் சிவகாமி அம்மையைத் தாயாகவும் ஏற்றுப்பாடியுள்ளார். இவர் இளந்தாரி மீது அருள் வேண்டி பஞ்சவண்ணத்தூது பாடியுள்ளார். இவர் முத்தமிழிலும் வல்லவர். ஆதலின் மூன்று நாடகங்களையும் எழுதியுள்ளார். பஞ்வவண்ணத்தூதுப் பாடல்கள் சிறந்த இசை அமைப்பு உள்ளது.

தமிழ்வேள் இ.க.கந்தசாமி
அமரர் தமிழ்வேள் இ.க.கந்தசாமி அவர்கள்(அவர்கள் கண்ணோட்டம்)தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களாலேயே உலகம் சிறப்புகளை தழுவுகின்றது. இவ்வகையில் தமிழுலகம் நன்மைப்பட வாழ்ந்தவர் இணுவில் மண் இனிதீன்றளித்த அறிஞர் தமிழ்வேள் கந்தசாமி அவர்கள்.
இணுவில் கிழக்கில் கந்தையா-சிவக்கொழுந்து தம்பதிகளின் மகனாகப் பிறந்து கற்றனகற்றுக் கற்றாங்கொழுகிய இ.க.கந்தசாமி அவர்கள் இணுவில் இளைஞர் சோவாசங்கச் செயலாளராயிருந்து ஊருக்கு உன்னத பணிகள் ஆற்றினார். இவரது குலதெய்வமாகிய சிவகாமி அம்மன் ஆலயத்தில் வெள்ளிதோறும் அறிஞர்களை அழைத்துச் நற்பிரசங்கங்கள் செய்வித்து வந்த இவருக்கு வழிகாட்டியாக விளங்கியவர். நாடறிந்த நல்லறிஞர் இணுவில் சபா ஆனந்தர் அவர்களாவார்.

சமயப்பணிகளோடு சமூகப்பணிகளிலும் முன்னின்றுழைத்த இவர் இணுவில் கிராம முன்னேற்றச் சங்கத்தின் செயலாளராகவும், உடுவில் கிராமசபை அங்கத்தவராகவும் செயற்பட்டுப்பல ஊர்ப்பணிகளை நிறைவேற்றினார். இணுவில் புகைவண்டி நிலையம், அஞ்சலகம் என்பன தோன்றவும், இணுவில் கிராமத்து வீதிகள் பலவும் திருத்தமுறவும் புதியபாதைகள் திறக்கப்படவும் காரணகர்த்தாவானார்.

இதுபோலவே அரசியலில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்த இவர் இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் இயங்குமுறுப்பினராக விளங்கித் தந்தை செல்வா கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கம், நாகநாதன் முதலிய தலைவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று விளங்கினார். இவ்வாறே கல்விப்பணியிலும் கரிசினை கொண்ட ஆசிரியராக இணுவில் சைவ மகாஜனா வித்தியாசாலை (இன்றைய மத்திய கல்லூரி) யில் பணியாற்றிப்பின்பு கொழும்புக்கு மாற்றப்பட்டார்.அங்கும் ஆசிரியப்பணியோடு தமிழுலகு நன்கறிந்த கொழும்புத்தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளராக 30 ஆண்டுகளாகத் தமிழ்ப்ணியும் ஆற்றினார். நாடளாவிய வகையில் தமிழ் மாணவர்மத்தியில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தினார். தமிழ்ச் சங்கத்துக்குப் பெரியார்களை அழைத்து இலக்கிய, சமய, தமிழ், இலக்கண சொற்பொழிவுகளும் பெரியார்கள் நினைவு விழாக்களும் நடாத்தினார். இதனால் இவர் கொழும்பு தமிழ்ச் சங்க வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் முன் நல்லை ஆதீனத்தின் ஈழத்து தமிழ்ப்புவர் மகாநாடு இவரது முயற்சியால் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இணுவில்சின்னத்தம்பிப்புலவர் பாடிய சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், பஞ்சவனத்தூது ஆகிய நூல்களை உரை எழுதி வெளிக்கொணர்ந்துள்ளார். இவர்வாழ்நாள் பிரமச்சாரியுமாவார். தமிழ்நாடு, மலேசியா, மொறிசீயஸ் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ள இவரால் இணுவிலும் ஈழமும் பெருமை பெறுகின்றது. இவரது இழப்பு இணுவிலுக்கு மட்டுமல்லாது தமிழுலகுக்கே பாரிய இழப்பாகும்.

Wednesday, July 9, 2008

சிவகாமி அம்மன் கோவில்

தன்னுடைய கணவனை தெய்வமாக வணங்கிய சிவகாமசுந்ததியும் அதனை மதித்த இணுவில் ஊர் மக்கள் அமைத்த கோவிலும்.Wednesday, June 25, 2008

வாழ்க்கை முறை

இயற்கையின் அநாதியான சக்தியை கடவுள் என்றும், அந்தக்கடவுள்களுக்கு உருவம் கொடுத்தும், அவர்களுக்குள் உறவுகள் வளர்த்தும் அதனை தங்களுடைய வாழ்க்கையில் கைக்கொள்வதும் ஒரு இனிமையான வாழ்வு....

வாழ்ந்து பார்த்தால் அதன் சுகம் இன்னென்றில் கிடைப்பது அரிது என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெளிவு. இந்தப் பூமியில் வாழ்க்கை என்றால் என்ன என்பது இன்னும் பலருக்குப் புரியாத புதிரா இருக்கும் போது.....
இன்னும் இன்னும் இணுவிலைப் பற்றி பார்க்க, தெரிந்து கொள்ள...
http://www.inuvilinfo.com/